கண்ணாடி போட்ட கதை
ஸ்கூல் படிக்கும் போது நல்லா படிக்கிற பசங்க எல்லாம் கண்ணாடி போட்டிருப்பாங்க. அப்போ ஆரம்பிச்சதுங்க இந்த கண்ணாடி போடற ஆசை. அதுவும் வீட்ல எல்லாரும் கண்ணாடி போட்டிருக்க நானும் எங்க கடைசி அக்காவும் மட்டும் தான் பாக்கி. நான் எட்டாப்பு படிக்ககும் போது எங்க அக்காவுக்கும் கண்ணுல பிரச்சனை வர, டாக்டர் கண்ணாடி போடனும்னு சொல்லிடார். அட குடும்பத்துல இப்ப என்னை தவிர எல்லாரும் கண்ணாடி போட்டுட நான் மட்டும் தனியாளாயிட்டேன். நாம சும்மா இருப்போமா? அடுத்த வாரமே ஆரம்பிச்சோம்ல.
"அம்மா எனக்கு ஒரு வாரமா போர்ட்ல எழுதுறது சரியவே தெரியல"ன்னு ஆரம்பிச்சு பிட்டு பிட்டா போட்டு ஒரு வழியா டாக்டர்கிட்ட போய் சேர்ந்தோம்.
செக்கப்புக்கு முன்னாடி கண்ணுல மருந்தை போட்டு "சத்த கண் மூடி உக்காருப்பா"ன்னு சொல்லிட்டு க்ளினிக் பின்னாடியே இருந்த அவர் வீட்டுக்கு டிபன் சாப்ட போயிட்டார். சின்ன புள்ளை இல்லியா, அவர் மசால் வடையை ஒரு வெட்டு வெட்டிடு வர்றதுக்குள்ள தூங்கிட்டேன். ஹிஹி. பாதி தூக்கதுல எழுப்பி டெஸ்ட் பன்னாரு. தூரத்துல ஒரு பலகைல எழுதி இருந்ததுல கடைசி வரிய படிக்க சொன்னாரு, டப்புனு படிச்சிடேன்.
"நல்லா படிக்கிறியே தம்பி"ன்னாரு, பாதி தூக்கதுல இருந்த நமக்கு அப்போ தான் விளங்கிச்சு.
"இல்ல டாக்டர் சில சமயம் சரியா தெரியல" முகத்தை பாவமா விச்சுக்கிட்டேன்.
"ம்ம்ம்ம், எங்கே கீழ இருந்து ரெண்டாவது வரிய படி"
வேணும்னே தப்பு தப்பா படிச்சேன். டாக்டர் லைட்டா தன் வழுக்கைய தடவி விட்டுகிட்டார்.
"சரி இப்போ கடைசி வரிய இன்னோரு தடவை படி"
இந்த தடவை பாதி சரியா, பாதி தப்பா... கொஞ்ச நேரம் என்னையும், போர்டையும் பார்த்தார். அப்புறம் எதோ டெலஸ்கோப் போல இருந்த ஒரு பைப் வழியா கண்ணை பார்த்தாரு. இன்னோரு தடவை பலகைய படிக்க சொன்னாரு.
அவரு சந்தேகமே வராம குழம்புற மாதிரி, ரான்டமா தப்பும், சரியுமா படிச்சேன். ஒரு புக்க எடுத்து என்னமோ தேடுனார். அவருக்கு மேட்டர் விளங்கவுமில்ல வந்த கேஸ விடவும் மனசில்லை.
வெளிய வெயிட் பன்ன எங்க அப்பாவை கூப்பிட்டு,
"கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் மாதிரி தெரியுது, இப்போதைக்கு நான் எழுதி தர பவர்ல கண்ணாடி போடுங்க. மாத்திரை தரேன் தினமும் கொடுங்க, ரெண்டு மாசம் கழிச்சு திரும்பவும் டெஸ்ட் பண்ணுவோம்"
கண்ணாடி கடைக்காரன் அந்த சீட்டை பார்த்துட்டு. "என்ன சார் இந்த பவர்ல கண்ணாடி போடறதுக்கு போடாம இருக்கலாம்"ன்னான்
"ஏதோ எழுதி கொடுத்தார், நீ கண்ணாடி கொடுப்பா, ஒரு நச்சரிப்பு ஒழியும்" - அப்பா
ரெண்டே நாள்ல அழகான ப்ரௌன் கலர் ப்ரேம்ல கண்ணாடி வந்தது. அதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு கண்ணாடியும் கண்ணுமா தான் அலைஞ்சேன்.
"தூங்கும் போது கூட கண்ணாடி எதுக்குடா?கனவெல்லாம் சரியா தெரியலயா?" - என் அக்கா.
தேவையே இல்லாம போட்டதாலோ என்னமோ,கண்ணாடி போட்டதுல இருந்து லைட்டா தலை வலி இருந்தது, வெளியே சொன்னா அடி விழும்னு அமுக்கமா இருந்தேன்.ஒரு வாரத்துக்கப்புறம் ஏதாவது காரணம் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா கண்ணாடி இல்லாமா புழங்க ஆரம்பிச்சேன். நாலு மாசத்துல எல்லாரும், நான் கண்ணாடி போட்டிருந்ததையே மறந்துட்டாங்க. அப்பா மட்டும் ஒரு வருஷத்துக்கு "உனக்கு கண்ணாடி ஒரு தண்ட செலவு"ன்னு சொல்லிட்டிருந்தார்.
அத்தோட முடிஞ்சுது நம்ம கண்ணாடி கதை. அப்புறம் காலேஜ் டைம்ல ரெண்டு தடைவ கூளிங் கிளாஸ் டிரை செஞ்சேன். "உனக்கு கூளர்ஸ் போட்டா comicsல வர Phantom மாதிரி இருக்குடா"ன்னு கிளாஸ்-மேட் ஒருத்தி கிண்டல் செஞ்சதுல இருந்து அதுவும் அவுட்.
இப்படி இருந்த என்கிட்ட, "உங்க ப்ளாக் முழு தமிழ் ப்ளாக்கா இருந்தா தான் தமிழ்மணம்ல சேத்துக்க முடியும்னு சொல்லி ஒரு முழு தமிழ் ப்ளாக் ஆரம்பிக்கவிச்சார் காசி. அதுக்கு பேர் வைக்கப்போய் மறுபடியும் கண்ணாடி போட்டு இருக்கேன். இந்த தடவை ரொம்ப நாள் போட்டிருப்பேன்னு நினைக்கிறேன்!
மூக்குக்கண்ணாடி
இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம்
தாத்தவோட
சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு
கண்ணாடிக்கு பின்னாடி
பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா,
புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?