Memento - விமர்சனம்
"இது இங்கேயிருந்து ஆரம்பிக்குத்துன்னு வச்சிப்போம்.."
"அப்ப நாம பேசனது எதுவும் யாருக்கும் தெரியகூடாதா?"
"இல்ல இப்போதைக்கு தெரிய கூடாது"
"ம்ம்ம்ம்..."
"இந்த நாலு வரி மட்டும் புரியுதா?"
"ம்ம்ஹும்"
"அதுவே இதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு உனக்கு தெரிஞ்சா?"
"ஆங், இப்ப புடிபடுது"
"அதேதான். இத முதல்ல இருந்து படிகறவுங்க, அட எத பத்தி பேசறாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு வருதுல்ல. இது மாதிரி ஒவ்வொரு எதிர்பார்புக்கு மேல எதிர்பார்புன்னு அடுக்கிகிட்டே போறாங்க. கடைசில உன்மையான ஆரம்பத்துக்கு வரும்போது எல்லாமே புரியும்.ஒரு பெரிய ஜிக்சா புஸ்ஸல் சட்டுன்னு ஒரு துண்டால சால்வ் ஆகற மாதிரி.Everything falls in its place"
"சூப்பரப்பு. அப்ப ஒரு தரம் கண்டிப்பா பாக்கலாம்"
"சினிமா பாக்கும் போது மூளைய கழட்டி வைக்காதவுங்க எல்லாரும் கண்டிப்பா ரசிச்சு பாக்கலாம்"
-----------------
"இது வெறும் மெனக்கெடல் இல்லப்பா. அந்த கதாபாத்திரத்தோட நிலையில நம்மள வைக்கிறாங்க"
"என்னது நமக்கும் மெண்டலா?"
"மெண்டல் இல்லப்பா, அது ஒரு ஞாபகமறதி. முதல்லேயே சொன்னேன்ல, அவனுக்கு முன்னாடி நடந்தது எதுவும் தெரியாது. இப்போ நடக்கிறது தான் தெரியும். அது போல நம்மள ஒவ்வோரு அஞ்சு நிமிஷத்துக்கும் பின்னாடி ஒரு படி கூட்டிட்டு போறாங்க. அப்படி போற வரைக்கும் நமக்கும் இப்போ என்ன நடக்குதுன்னு தான் தெரியும், இதுக்கு முன்னாடி என்ன ஆச்சுன்னு, இப்போ என் இது நடக்குதுன்னு தெரியாது. அது மட்டுமில்ல, இப்படி செய்யறதால ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கும் ஒரு சஸ்பென்ஸ் ஒடையிது, ஒன்னு புதுசா உதயமாகுது."
"வெளங்கலையே"
"சரி, இது இங்கேயிருந்து ஆரம்பிக்குத்துன்னு வச்சிப்போம்......"
-----------------
"என்னது படம் கடைசில இருந்து ஆரம்ப்பிக்குமா? எப்படி? VCR ரிவைண்ட் அமுக்கினா எல்லாரும் பின்னாடி நடந்து பின்னாடி பேசுவாங்களே அப்படியா?"
"சே. படமில்லாப்பா, கதை கடைசில இருந்து ஆரம்பிக்கும். படம் நகர நகர கதை பின்னாடி போகும்."
"அட குழப்பறீங்களே"
"வேனும்னா இப்படி வச்சுகலாம் DVDல கடைசி அத்தியாயம் முதல்ல பார்த்து அப்படியே பின்னாடியிருந்து ஒன்னொன்னா போயி முதல் அத்தியாயம் பார்த்தா எப்படியிருககும்?''
"ம்ம்ம்ம். சரி இதனால என்ன லாபம், புதுசா செய்யனும்னு ஏன் மெனக்கெடனும்"
"இது வெறும் மெனக்கெடல் இல்லப்பா. அந்த கதாப்பாத்திரத்தோட நிலையில நம்மள வைக்கிறாங்க"
----------------
"கதை பெருசால்ல, ஒலி/ஒளியும் கூட மூக்கில விரல் வைக்கிலங்கிற நடிக்கிறவுங்களும் ஆகா ஓகோன்னு செய்யலன்னு சொல்ற. ஆனா படம் சூப்பருன்னும் சொல்ற"
"ஆமாண்டா, சினிமாவுல இருக்கிறதிலேயே ரொம்ப பவர்புல்லான ஆயுதமான திரைக்கதைய முழுவீச்சுல பயன் படுத்தியிருக்காங்க. அதனால தான் படம் முடிஞ்சதும் ஒரு சூப்பர் த்ரில் ரைட் போன மாதிரி ஒரு feeling."
"என்னதான் புதுசா செய்யமுடியும் எவ்வளவு நேரம் தான் சஸ்பென்ஸ் வைக்க முடியும் எப்படியும் கதைய சொல்லி தானே ஆகனும்.
"கதைய சொல்றாங்க, ஆன தலைகீழா. மொத்த கதையும் நேர்கோடுல பின்னாடி போகுது."
"என்னது படம் கடைசில இருந்து ஆரம்ப்பிக்குமா? எப்படி?
---------------
"நம்மளோடது மட்டமான காப்பியா? சூர்யா நல்லா நடிச்சிருப்பாரே. அஸின்! அவங்க என்னமா பின்னியிருப்பாங்க. 'ஓரு மாலை இளவெயில் நேரம்..', 'சுட்டும் விழி சுடரே...'யெல்லாம் போன வருஷத்தோட சூப்பர்ஹிட். தெரியுமா உனக்கு?"
"ஒத்துக்கிறேன்பா. உன்மையா சொல்லனும்ன்னா, இதொட ஹிரோ ஹிரோயினவிட சூர்யா/அஸின் நல்லாவே நடிச்சிருப்பாங்க, ஆனாலும் படம் பார்த்த திருப்தியில நம்மளோடது ஒரிஜினாலோட கிட்ட கூட வரல"
"ஒளிப்பதிவு? ஹாலிவுட்டாச்சே நல்லா செய்திருப்பாங்க!"
"ம்ம்ம் அப்படி ஒன்னும் பெரிசில்ல"
"கதை பெருசால்ல, ஒலி/ஒளியும் கூட மூக்கில விரல் வைக்கிலங்கிற நடிக்கிறவுங்களும் ஆகா ஓகோன்னு செய்யலன்னு சொல்ற. ஆனா படம் சூப்பருன்னும் சொல்ற"
---------------
"என்னடா இந்த வீக்கெண்ட் என்ன படம் பார்த்தே?"
"
Memento ன்னு. ஒரு ஹாலிவுட் படம். தமிழ்ல கூட அத மாதிரி ஒரு படம் எடுத்தாங்களே, கஜினின்னு பேரு"
"ஆமாம்பா, நான் கூட கேள்வி பட்டேன் அது ஒரு ஹாலிவுட் படத்தோட காப்பின்னு. நீ பாத்ததும் இதுவும் ஒரே கதையா?"
"ம்ம்ம்ம்....கதைன்னு பார்த்தா ஒன்னுதான். ஒரு ஹிரோ, அவனோட மனைவி மேல ஒரு கொலைவெறி தாக்குதல். அந்த போராட்டதுல இவனுக்கு மண்டையில அடி. அதுனால ஒரு Short term memory loss condition. 15 நிமிஷத்துக்கு மேல ஒன்னுமே ஞாபகம் இருக்காது. ஆனா அடிபடறத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கு. மனைவிய கொலை செய்தவன பழி வாங்க போறான்....வாங்கினானா? எப்படி?"
"ஆமாம் அதே தான் கஜினியோட கதையும்."
"ஒத்துமை அதோட முடியுது. அதை தாண்டி இந்த படம் பாக்கறவுங்கள சோதிக்குது. அருமையான உத்திய பயன்படுத்தி படத்தோட மொத்த அனுபவத்தையும் ஆடியன்ஸ் பொறுப்புல விட்டுடறாங்க. இந்த படத்தோட மொத்த எஞ்சாய்மெண்டும் பாக்கிறவுங்க மூளையோட ரேசிங்கால வருது.
அதனால காப்பின்னு சொல்லவேண்டாம். அப்படி காப்பின்னு சொன்னா நம்மளோடது மட்டமான காப்பி."
"நம்மளோடது மட்டமான காப்பியா?"
--------------------
பி.கு?
படம் பார்த்தவுடனே யோசிச்சு வச்சது, இப்போதான் எழுத முடிஞ்சுது. புரியவில்லை என்பவர்கள். இன்னுமொரு முறை முதலில் இருந்து படிக்கலாம். அப்படியும் ஹுஹூம் என்றால் கடைசி பாராவில் இருந்து மேலே படித்து பாருங்களேன்.