நீ வரேன்ணா நான் வேண்டான்னா சொல்லுவேன் - விமர்சனம்
என்னங்க தமிழ், இந்தி இல்லேனா வெளிநாட்டு படங்களை பத்தி தான் விமர்சனம் எழுதனுமா? பக்கத்தூரு ஆந்திரால சுந்தர தெலுங்குல எடுக்குறது கூட சினிமா தாங்க!
"நூ வொஸ்தாவன்டே நேனு வொத்தண்டானா" இது தாங்க படத்தோட தலைப்பு..அர்த்தமா? பதிவோட தலைப்ப பாருங்க.
கொஞ்சம் கதைய சொல்லிறேன்னே..
ஒரு அழகான கிராமம். அதுல பாசமலர் ரீப்ளே மாதிரி ஒரு அண்னன் தங்கை - விவசாய குடும்பம். தங்கைக்காக உயிரையும் கொடுக்க தயாரா அண்ணன். பெரிய எடத்துல கல்யாணம் கட்டி கொடுத்தா தங்கச்சி எங்கே அவர விட்டு போயிடுவாளோன்னு பெரிய சம்பந்தங்களையெல்லாம் வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு பாசம். அவரோட பேச்சுக்கு மறுபேச்சு பேசாத தங்கச்சி
(தருமி சார் அடிக்கவராதீங்கோ). தன்னோட நெருங்கிய, பணக்கார, தோழியோட கல்யாணத்துக்கு போறா தங்கை. முதல் முறையா அவ அண்ணனை பிரிஞ்சு. அங்கே வராருங்கோ நம்ம ஹீரோ - லண்டனிலிருந்து. சும்மா பணத்துலேயே புரண்டு எழுறவுரு. வெளையாட்டு புள்ள.
இந்த விளையாட்டு புள்ளைக்கும், நம்ம பொறுப்பான தங்கைக்கும் ஆரம்பத்துல சரியா ஒத்து போகலைன்னாலும் மெள்ள மெள்ள பத்திக்குது
காதல். இது தெரிய வர ஹீரோவோட அம்மா, அந்த பொண்ணை திட்டு திட்டுன்னு திட்டி , அப்போதான் அங்கே வந்து சேர்ற அண்ணனையும்
சேர்த்து அவமான படுத்தி வெளிய அனுப்பிடறாங்க. மனசை கல்யாண வீட்டிலேயே வச்சிட்டு கண்ணீரோட போறா தங்கச்சி.
காதலிய தேடிட்டு காதலன் வரார் கிராமத்துக்கு. அண்ணன் கிட்ட அடி வாங்கி, வாதமெல்லாம் செய்து கடைசியா ஒரு போட்டிக்கு உடன்
படறார். என்ன போட்டின்னா இவரும் அண்ணன் மாதிரி விவசாயம் பாக்கணும். அண்ணன் அளவுக்கு மகசூல் பார்த்தா தங்கைய கல்யாணம்
கட்டிக்கலாம். அட காதல் தைரியத்துல "அண்ணன் அளவுகென்ன அண்ணன் அளவுக்கு, அண்ணனோட ஒரு படி அதிகமாவே விளைச்சு காட்டறேன்"னு சவால் விடறார்.
அப்புறமென்ன, லண்டன்கார மாப்புள எப்படி விவசாயம் செய்யறார், பயிரை மட்டுமல்லாமல் அண்ணனோட மனசையும் எப்படி அறுவடை செய்யறார். இதற்கிடையில இந்த ஜோடி சேரக்கூடாதுன்னு நிற்கற சிலரோட தடைகளை தாண்டி என்ன நடக்குது என்பது தாங்க கதை.
அண்ணனா ஸ்ரீஹரி, தங்கையா த்ரிஷா, ஹீரோவா சித்தார்த், ஹீரோவோட அப்பாவா பிரகாஷ்ராஜ் நடித்து, தேவிஸ்ரீபிரசாத் இசையில் நம்ம பிரபுதேவா இயக்கிருக்கார். (நடனம் மட்டுமில்ல, முழு படமும்) ஆந்திராவுல படம் சூப்பர் ஹிட்டுங்க.
வழக்கமான காதல் கதை தான்னாலும் ரோம்பவே ரசிக்கும்படியா ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பாங்க. எல்லாவகையான செண்டிமெண்டும் உண்டு. விவசாயம்ன்னா கிலோ எவ்வளவுன்னு கேக்கற ஒருத்தர் சும்மா ஒரு பாட்டுல விவசாயியா மாறது, சுமார் 1 கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் நின்னு காதலர் 'ஹூப்பு'ன்னு ஊதினா இங்கே காதலி முகத்துல தென்றல் மோதறதுன்னு லாஜிக்கே பார்க்காத முட்டாள்தனங்களுக்கு குறைச்சலில்லை. அது சரி காதல்ன்னா இதெல்லாம் இல்லாமலா? அதான் முட்டாள்தனத்தோட மொத்த குத்தகையாச்சே!
படத்தோட அழகே இந்த முட்டாள் தனங்களை, ரசிக்கும் படியா எடுத்திருக்கிறது தான். முக்கால்வாசி படம் சும்மா ஒரு பெரிய டெட்டி பேர் (Teddy bear) கட்டி புடிச்சுட்டு பாக்கற மாதிரி ஒரு க்யூட்டான உணர்வு கொடுக்குது. ஆடு குட்டி போடறத பாக்கற சித்தார்த் பின்னாடி நின்னு கொஞ்சம் பயம், கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் ஆசையோட எட்டி பாக்கற த்ரிஷா என ரசிக்கும் படியான சின்ன சின்ன சம்பவங்கள் தித்திக்கும் சக்கரைபொங்கலுக்கு நடுவே முந்திரி திராட்சையா சப்பு கொட்ட வைக்குது.
த்ரிஷாவும், சித்தார்த்தும் கொடுத்த பாத்திரத்தை குறையில்லாமல் செய்திருக்காங்க. தேவிஸ்ரீபிராசதோட இசையில் பாட்லெல்லாம் சூப்பர்ஹிட்.
சந்த்ருலோ உண்டே குண்டேலு... (சந்திரனிலிருக்கும் முயல் குட்டி...) - ஷங்கர் மகாதேவன்
நிலுவத்தமு நினு எப்புடைனா... (நிலைக்கண்ணாடி உன்னை பார்த்து...) - கார்த்திக் ஆகியவை இரண்டும் என்னுடைய விருப்பங்கள்.
கண்ணை உருத்தாத ஒளிப்பதிவு. தாவனியில் தேவதையா த்ரிஷா, பிரபு தேவாவோட நடன அமைப்பு, கொஞ்சம் கூட விரசமில்லாத திரைக்கதை இவையெல்லாம் படத்தோட பக்கபலம்
ஆக மொத்ததில் ஒரு Feel good film. ஓய்வா பாக்கலாம், உங்களுக்கு பாஷை புரியாட்டி கூட.
இல்ல, மொழி புரியலைன்னா பார்க்க மாட்டென்னு நினைக்கறவரா நீங்க, அப்போ கொஞ்சம் பொறுங்க. இதே படம் தமிழ்ல வருது. ஜெயம் ரவி, த்ரிஷா, அண்ணனா பிரபுவும், ஹீரோவோட அப்பாவா பாக்கியராஜும் நடிக்கிறாங்க. படத்தோட பேரு
சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும். அது எப்படி இருக்குன்னு பார்ப்போம்