'வாசு, காப்பிரைடிங் எழுதிட்டியா?' மெள்ளமாய் பக்கத்திலிருந்த வாசுவிடம் கிசுகிசுத்தேன்.
'ஓ, நீ?' என திருப்பி கிசுகிசுத்தான் வாசு.
4த் ஸ்டாண்டர்ட் டி செக்ஷ்னில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு தமிழ் மிஸ் தான் கிளாஸ் டீச்சர். முதல் வகுப்பே அவங்களோடது தான். மிஸ் கிளாசில் இருக்கும் போது தானகவே எங்கள் குரல் கிசுகிசுப்பை தாண்டி மேலே வந்ததில்லை.
ஆகா தனியாய் மாட்டிகொண்டோம். அதுவும் கையை திருப்பி வைத்து முட்டிமேலேயே போடும் இந்த தமிழ் டீச்சரிடம்! என்னை இப்படி அம்போ என விட்டு தான் மட்டும் எழுதி வந்திருந்த வாசுவிடம் அநியாய கோவம் வந்தது. ஹூம் அவனுக்கு அழகான கையெழுத்து என ரோம்பவே பீற்றிக்கொள்கிறான் என நினைத்ததுன்டு.
அப்பொழுதெல்லாம் என் கையெழுத்து மிகப் பிரபலம். ஹரப்பா நாகரீகத்தை பற்றிய ஒரு கண்காட்சி டிஸ்ப்ளேயில் கல்வெட்டு எழுத்துக்களை என்னைத்தான் எழுத சொன்னார்கள். சரி அது எதற்கு இப்போழுது.
பேந்த பேந்த முழித்தாலேயோ, இல்லை என் மிகப் பிரசித்தி பெற்ற கையெழுத்தாலோ தெரியவில்லை. டீச்சருக்கே உரித்தான ஒரு Natural instinct உடன் .
'பாலு எங்கே காப்பிரைட்டிங் கொண்டுவா' என பனித்தார்.
'என்னடா இது ஒன்னுமே கானோம். எழுதிலயா'
'----'
'கேக்கறேன்ல வாயல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே? உன்னையெல்லாம் தொலிய உரிக்கனும்'
'----'
'மத்த நேரமெல்லாம் வாயாட வருதே..இப்பொ என்ன? நீயெல்லாம் எங்க உருப்படபோற, போ first hourஏ அடிக்க வேண்டாம்னு பார்க்கறேன்.' போய் உன் இடத்துல நில்லு'
'பசங்களா இன்னிக்கு நாம அதியமான் ஔவையார் கதை படிக்க போறோம். ஔவையார் பாட்டெல்லாம் நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்களே..' என பாடத்தில் மூழ்க ஆரம்பித்தார்.
பாதி வகுப்பு கடந்திருக்கும், இருப்புக்கொள்ளவில்லை எனக்கு. பாதி கவனம் பாடத்திலும் பாதி கவனம் கதையில் ஊன்றிப்போய் வாய் திறந்திருக்கும் வாசுமேலும் இருந்தது. டீச்சர் பாக்காத போது நடராஜ் ரப்பரை திறந்திருந்த அவன் வாயில் போட்டுவிட்டேன். சின்ன ரப்பருங்க அதுக்கே பொறைக்கேறி இருமிவிட்டான்.
'பாலு அங்கன என்ன? சும்மா இருக்க மாட்டியா? வாசு என்ன ஆச்சு?' - டீச்சர்
எங்கே உண்மையை சொல்லிடுவானா என பயத்தில் நானே முந்திக்கொண்டேன்.
'இல்ல மிஸ் நிஜமாவே நெல்லிக்கா சாப்டா ரொம்ப நாள் உயிரோட இருக்கலாமான்னு கேட்டேன்'
'ஏன் அத என்கிட்ட கேக்க மாட்டியா? வாசு தான் உனக்கு டீச்சரா என்ன வாசு?'
'இல்லை மிஸ்...க்கும் க்கும் க்கும்' என இழுத்தான் வாசு.
'ஹூம் ஹோம்வோர்க் செய்றதுக்கு வக்கில்ல வாயைப் பாரு. ஆமா நெல்லிக்கா சாப்டா ஒடம்புக்கு ரொம்ப நல்லது. அதுவும் ஔவையார் தந்த நெல்லிக்கா ரோம்பவே ஸ்பெஷல் போதுமா?'
'க்கும் க்கும்'வாசு என்ன ஆச்சு ஏன் இப்படி இருமற?' என கேட்டுக்கொண்டே கிட்ட வந்துவிட்டார்.
'இவன் ரப்பர வ்வாயில க்கும்....போட்டுடான்' இருமலுடன் போட்டுகொடுத்தான்.அவனை ஆசுவாசப்படுத்திய பின் என்னிடம் திரும்பினார்.
'போடா போய் க்ளாஸ்க்கு வெளிய நில்லு, லஞ்ச் வரைக்கும் அங்கன தான் நிக்கனும்'.
மறக்காமல் அடுத்து வந்த மேத்ஸ் டீச்சரிடமும் 'இவனை வெளியவே நிக்கவைங்க மிஸ், வால்தனம் அதிகமாயிடுச்சு' என சொல்லிவிட்டு போனார்.
********
லஞ்ச் டைமில் கிட்டே வந்த வாசுவிடம் பேசவில்லை நான்'
சாரிடா'.'
ரோம்ப இருமல் வந்ததுடா அதான் சொல்லிட்டேன்.'
'நீ என்ன கேட்டாலும் கொடுக்கிறேண்டா, அந்த ஹீமேன் கார்ட்ஸ் வேனுமா?'
கடைசியில் ஹீமேன் கார்ட்ஸ் தான் எங்கள் பினக்கை தீர்த்தது.
********
அன்று இரவு வழக்கம் போல் சாப்பிட சொல்லி வம்பு செய்து கொண்டிருந்த என் அம்மாவிடம் ஆரம்பித்தேன்.'
மா, நெல்லிக்கா உடம்புக்கு நல்லதா?'
'குளிர்ச்சிடா, சளி புடிக்கும். ஏன் திடிர்ன்னு கேக்கற? ஸ்கூலுக்கு வெளிய வண்டிக்காரன்கிட்ட ஏதாச்சும் வாங்கிதின்னியா?'
'இல்லமா, அங்க நெல்லிக்காவே விக்கலயே. சும்மா தான் கேட்டேன்.'
'அதானே, ஏதானும் வாங்கி தின்னு ஜூரம் காய்ச்சல்ன்னு படுத்தியோ, இருக்கு உனக்கு. சரி இப்போ இதை சாப்ட்டு போய் தூங்கு, நாளைக்கு காலைல ஹோம்வொர்க் செய்யனும்'
********
அடுத்த நாள் காலை பள்ளிக்கூடத்தில் வாசுவை பார்த்ததும்,
'வாசு, இந்த தமிழ் மிஸ் பொய் சொல்றாங்கடா. நேத்து நான் அம்மாகிட்ட கேட்டேன். சொன்னாங்க நெல்லிக்கா சாப்டா ஜொரம் வரும்மாம்'
'ஆமாடா எங்க அம்மாகூட நெல்லிக்கா மரத்துகிட்டேயே போக கூடாது ன்னு சொல்லியிருக்காங்க'
'உங்க வீட்ல நெல்லிக்கா மரம் இருக்கா?'
'இல்ல, ஆனா எங்க தெருல கடைசி வீட்டல இருக்கு'
'நாம இன்னிக்கு நெல்லிக்கா சாப்பிடலாமா?' என என் திட்டத்திற்கு அவனை தூண்டில் போட்டேன்.
'வேணாம்டா. அம்மாக்கு தெரிஞ்சா அடிப்பாங்க. ஜூரம் வந்தா டாக்டர்கிட்ட வேற போனும் ஊசியெல்லாம் போடுவார்'
'நீ சாப்டலன்னா போ, எனக்காச்சும் அந்த மரத்துகிட்ட கூடிட்டு போ. நான் சாப்டனும் டா. ஜூரம் வந்தா தமிழ் மிஸ்தான் நெல்லிக்கா சாப்டா ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னங்கன்னு சொல்லிடலாம். எங்க அம்மா வந்து சண்டை போடுவாங்க.' அப்புறம் நினைவு வந்தவனாய் 'எங்க டாக்டர் ஊசியெல்லாம் போடவே மாட்டார். எப்பவுமே டானிக் தான்' என்றென்
தமிழ் மிஸ்சும் என் அம்மாவும் சண்டை போடுவதை நினைத்து பார்த்திருப்பானோ என்னமோ. 'சரி இன்னிக்கு சாய்ங்காலம் போலாம். ஆனா நான் மரம் ஏற மாட்டேன்'
********
சாய்ந்திரம் பெல் அடித்தவுடன் ஓட துவங்கினோம் வாசுவின் வீட்டு தெரு வந்த பின் தான் நின்றோம். தெருவின் ஆரம்பத்திலேயே இருந்தது அந்த வீடு. க்ரில் கதவில் பெரிய வெள்ளை சிலுவை இருந்தது. மரங்கள் இருந்ததால் சற்று இருட்டாக இருந்தது.
'இந்த வீடு தாண்டா'
'நாய் இருக்காடா?' திறக்க போன கதவை பிடித்துக் கொண்டு கேட்டேன்.
'நாயெல்லாம் இல்ல, ஒரே ஒரு வயசான ஆன்ட்டி இருக்காங்க. அவங்க பையனெல்லாம் வேற ஊருல இருக்கறதா அம்மா சொல்லிருக்காங்க'.
கீறீச் சத்தம் அதிகம் வராதபடி மெள்ளமாய் கதவை திறந்து உள்ளே சென்றோம். வலது புறம் கிட்ட தட்ட வீட்டின் பின்பக்கம் இருந்த மரத்தை காட்டிய வாசு.
'இதான் நெல்லிக்கா மரம்'
வெளிர் பச்சை இலைகளுடன், அழகாய் இருந்தது மரம் கொத்து கொத்தாய் நெல்லிக்காய், கோலிக்குண்டை மரத்தில் ஒட்டி வைத்தது போல இருந்தது.எப்படி ஏறுவது என சுற்றி சுற்றி பார்த்த போது காம்பவுண்ட் சுவர் பக்கத்தில் இருந்த பெரிய கல் கண்ணில் பட்டது. லஞ்ச் பேக்கை அதன் பக்கதில் வைத்துவிட்டு, கல் மீதேறி, காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று, சுவருக்கு நேர் மேலெ இருந்த ஒரு கிளையை தாவி பிடித்த போது..
'வவ் வவ் வவ்' என நாய் குறைக்க ஆரம்பித்தது.
கிளையில் தொங்கிக் கொண்டே நான், ' டேய் நாயில்லைன்னு சொன்னியே'
'இந்த வீட்ல இல்லைடா, ஆனா பக்கத்து வீட்ல இருக்கு'திரும்பி பார்த்தால், நான் ஏறிய சுவருக்கு அந்த பக்கம் கருப்பாய் கிட்ட தட்ட என்னுடைய உயரத்தில் பாதியில் ஒரு நாய். முன்னங்கால்கள் இரண்டையும் சுவர் மேல் அமர்த்தி நின்று குரைத்துக் கொண்டிருந்தது.
அதற்குள் சத்தம் கேட்டு நாங்கள் புகுந்த வீட்டின் ஜன்னல் வழியே ஒரு பாட்டி எட்டிப் பார்த்தார். மரத்தை பிடித்துக் தொங்கி கொண்டிருந்த என்னை பார்த்தவுடன்
'திருட்டுப் பசங்களா, நெல்லிக்கா திருட வீட்டுக்குள்ளேயே வந்துடீங்களா..இரு இரு' சொல்லி முடிக்கும் முன்னரே பின் பக்க கதவு திறந்தது.
கையில் கொம்புடன் வெள்ளைச் சேலையில் ஓட்டமும் நடையுமாய் வந்த அவரை பார்ததும் சுதாரித்துக்கொண்ட வாசு ஓட அரம்பித்தான். எனக்கென்னமோ தமிழ் புத்தகத்திலிருந்து ஔவையார் ஓடி வருவது போல இருந்தது, வியப்பிலிருந்து மீண்டவுடன் பயத்தில் பிடியை தளரவிட்டேன்.
தட். நான் விழுவதற்குள் எனக்கு நேர் கீழே பாட்டி வந்துவிட, அவர் மேல் நான். எனக்கு பெரிதாய் அடிப்படவில்லை. பாட்டிக்குதான். நின்று பார்க்க கூட தோன்றவில்லை, ஓட்டம் வீட்டுக்கு வந்த பின் தான் நின்றது.
********
அன்று இரவு பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது, அடுத்த மூன்று நாள் ஸ்கூலுக்கு மட்டம். இந்த முறை டாக்டர் ஊசிக் கூட போட்டார். மூனாவது நாள் சாய்ந்திரம் என்னை பார்க்க வாசுவும் அவன் அம்மாவும் வந்தார்கள்.
"...ஸ்கூல் பக்கத்துல ஏதாவது வாங்கி தின்ன வேண்டியது அப்பறம் இப்படி ஒடம்பு சரியில்லாம படுத்துக்க வேண்டியது. நல்ல வேள இப்போ எக்ஸாம் ஏதுவுமில்ல" ஹாலில் என் அம்மா வாசுவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.
'அடுத்த ஒபென் ஹவுஸ்ல ஸ்கூல் பக்கதுல இப்படி கட போடறவா மேல ஆக்ஷ்ன் எடுக்க சொல்லனும்' - வாசுவின் அம்மா
'பாவம் கொழந்த ல்ஞ்ச் பேக் கூட தூக்க முடியாம அங்கே விச்சுட்டு வந்துட்டான் போல, பேக் எங்கடான்னு கேட்டா முழிக்கிறான்'
உள்ளே பெட்ருமில் நானும் வாசுவும்.
'வாசு லஞ்ச் பேக் பாட்டி வீட்லேயெ விட்டுடோம்டா..'
'அந்த வீட்ல இப்போ யாரும் இல்லடா, பாட்டிக்கு ஒடம்பு சரியில்லையாம். பையன் ஊருக்கே கூட்டிடு போய்டாங்கன்னு அம்மா சொன்னாங்க. வேணும்னா நாளைக்கு போய் பார்க்கலாம்'
'....இல்ல வேணாம்.'
சிறிது நேர யோசனைக்கு பின்...'அந்த பாட்டி நிறைய நெல்லிக்கா சாப்டிருப்பாங்கள்ல. அப்போ ரொம்ப நாள் உயிரோட இருப்பங்கல்ல?' என்ற என்னை புரியாமல் பார்த்தான் வாசு
********
.
hmm, that is some thing troubling me too. I use unicode fonts only.
Please try this in the menu bar. Go to
view>encoding>and select UTF-8
நல்லா இருக்குங்க :). அதுக்கப்புறம் நெல்லிக்கா சாப்பிட்டீங்களா?!! :)
நன்றி பொன்ஸ். அவன் நானில்லை. :)
//....எனக்கென்னமோ தமிழ் புத்தகத்திலிருந்து ஔவையார் ஓடி வருவது போல இருந்தது,....//
மரத்து மேல இருந்து கூட கற்பனை ஓடுதே!!!!!
நல்லா இருந்துதுங்க.
//மரத்து மேல இருந்து கூட கற்பனை ஓடுதே// முதல்ல அதானுங்க ஓடுச்சு அப்பறம் தான் அட நாம் ஓடனும்பான்னு தோனுச்சு! ;)
கடைசியா அந்தப் பாட்டி என்னதான் ஆனாங்க, உங்க பை என்னதான் ஆச்சு?
இதைச் சொல்லலையே...
பிரதீப்.
நான் அவனில்லப்பா.
அட என்ன இது ஒரு பின்நவினத்துவ கதையல இதெல்லாம கெக்ககூடாதுன்னு யாரச்சும் சொல்லுங்களேன் ;)
நந்தன், அழகான கதை.
//Go to
view>encoding>and select UTF-8//
உங்கள் பக்கம் நேரடியாக UTF-8 குறியீட்டைப் பயன் படுத்த
meta http-equiv="Content-Type" content="text/html; charset=UTF-8" /"
என்ற வரிகளை உங்கள் அடைப்பக்கத்தின் (Template) ஆரம்பத்தில் சேர்த்து விடுங்கள். (முன்னும் பின்னும் < , > சேர்க்க வேண்டும். அவை இருந்தால் இந்த பின்னோட்டத்தை ஏற்க மறுக்கிறது)
குழப்பமாக இருந்தால் வேறொரு வலைபதிவிலிருந்து வெட்டி ஒட்டிக் கொள்ளுங்கள்.
மனியன். நன்றி, உதவிக்கும் சேர்த்தே...சேர்த்துவிட்டேன் :)